மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் காங்., 'மாஜி' எம்.பி., சுரேஷ் சந்திப்பு
மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் காங்., 'மாஜி' எம்.பி., சுரேஷ் சந்திப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:08 AM

லோக்சபா தேர்தலில் தோற்றாலும், பெங்களூரு ரூரல் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் அரசியலில் ஆக்டிவ்வாக காணப்படுகிறார்.
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ். கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி ஆவார். பெங்களூரு ரூரலில் இருந்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற சுரேஷ், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்திடம் தொகுதியை பறிகொடுத்தார்.
ஆனாலும், தோல்வியை பற்றி கவலைப்படாமல், அரசியலில் ஆக்டிவ்வாக உள்ளார். பெங்களூரு ரூரல் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு மனு வாங்குகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டில்லி சென்று, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தார்.
அப்போது, 'கர்நாடகாவில் நிலுவையில் உள்ள ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து பேசிய, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ். இடம்: புதுடில்லி
- நமது நிருபர் -.