மூடா, வால்மீகி முறைகேடு வழக்குகள் திசை திருப்ப காங்கிரஸ் அரசு சதி
மூடா, வால்மீகி முறைகேடு வழக்குகள் திசை திருப்ப காங்கிரஸ் அரசு சதி
ADDED : செப் 07, 2024 07:44 AM

ஹூப்பள்ளி: ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைதாகி, பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரேணுகாசாமி கொலையில் மறைந்திருந்த ஒவ்வொரு ரகசியங்களும், வெளிச்சத்துக்கு வருகின்றன. படங்கள் வெளியாகின்றன. அரசே இந்த படங்களை உள்நோக்கத்துடன் வெளியிடுவதாக, எதிர்க்கட்சி பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது.
ஹூப்பள்ளியில் நேற்று, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:
மூடா மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை, திசை திருப்பும் நோக்கில், நடிகர் தர்ஷனின் படங்களை அரசு பகிரங்கப்படுத்துகிறது.
ரேணுகாசாமியின் கொலை, மாநிலம் கண்ட கொடூரமான சம்பவமாகும். மூடா மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடுகள் அம்பலமான பின், இது பற்றி அதிகமாக சர்ச்சை நடந்தது. இதில் இருந்து திசை திருப்பும் நோக்கில், தர்ஷனின் வழக்கை இழுத்து வந்துள்ளனர். கொலை செய்தவர்களுக்கு, தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்.
விசாரணையை மனதில் கொண்டு, ரகசியமாக வைக்க வேண்டிய படங்களை வெளியிட்டிருப்பது குற்றமாகும். நீதிமன்றம் இதை தீவிரமாக கருத வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா ஊழல் குறித்து, ஒன்றரை ஆண்டு மவுனமாக இருந்து, இப்போது விசாரணை நடத்துவது ஏன்? காங்கிரஸ் அரசு வந்து, ஒன்றரை ஆண்டு ஆகிறது. 2021 - 22 பொதுக் கணக்கு தணிக்கை அறிக்கையை, ஏன் வெளியிடவில்லை?
கொரோனா முறைகேடு குறித்து, விசாரணை நடத்தட்டும். முந்தைய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரும் கூட, விசாரணை நடத்தும்படி தனக்கு எந்த பயமும் இல்லை என, கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மாநில பா.ஜ., தலைவர் அசோக்கும், விசாரணை நடக்கட்டும் என்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.