காங்., அரசு தானாக கவிழும்: ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை
காங்., அரசு தானாக கவிழும்: ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை
ADDED : மே 16, 2024 10:38 PM

தார்வாட்:
''கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ.,வின் 'ஆப்பரேஷன் தாமரை' தேவையில்லை. உட்கட்சி பூசலால் தானாகவே அரசு கவிழும்,'' என பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அரசு பலமாக இருப்பதாக சித்தராமையா கூறுகிறார். காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்து உள்ளது. பா.ஜ.,வின் 'ஆப்ரேஷன் தாமரை' தேவையில்லை. காங்., கட்சியின் பூசல்களே அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
இதை கருத்தில் கொண்டு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். இதையே மூன்று மாதங்களுக்கு முன் நானும் கூறியிருந்தேன். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், நிர்வாகம் தோல்வி அடைந்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. நேஹா கொலைக்கு பின், போலீசார் விழித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கை லேசாக எடுத்து கொண்டனர்.
அஞ்சலியின் வீட்டிற்கே சென்று அவரை கொன்றது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் தான் காரணம். எங்கள் முடிவில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எனவே தான் பிரஜ்வல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கூறி வருகிறோம். இதில் அரசியல் எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
***

