ஆலமர கிராம பஞ்சாயத்துகள் அமைக்க காங்., அரசு ஆர்வம்
ஆலமர கிராம பஞ்சாயத்துகள் அமைக்க காங்., அரசு ஆர்வம்
ADDED : ஜூலை 05, 2024 06:09 AM

பெங்களூரு: ''மக்களுக்கு கிராமங்களிலேயே நியாயம் கிடைக்க வேண்டும். எனவே, ஆலமர திண்ணை போன்று நீதிமன்றங்கள் அமைத்து நீதிபதி தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுவர்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரின் விதான் சவுதாவில் அவர் அளித்த பேட்டி:
ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் ஆலமர திண்ணைகளில் நியாய பஞ்சாயத்துகள் நடக்கும். அதே போன்று நீதிமன்றங்கள் அமைத்து, இவற்றுக்கு நீதிபதிகளே தலைமை ஏற்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்படும்.
கிராமப்புற மக்களுக்கு கிராம அளவில் நியாயம் கிடைக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பாட்டில் இருக்கும் ஆலமர திண்ணை நியாய பஞ்சாயத்துகள் மீண்டும் கொண்டு வரப்படும். தாலுகா அளவிலான நீதிபதிகள், நியாய பஞ்சாயத்துகளுக்கு தலைமை ஏற்பர்.
மத்திய அரசு ஜூலை 1ல், அமல்படுத்திய புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, ஆட்சேபனைகள் இருந்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேடு குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்து, முதல்வர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கை பா.ஜ.,வினர் கூறுவது போன்று, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
மழைக்கால கூட்ட தொடரில், எதிர்க்கட்சியினர் எதை பற்றி ஆலோசிப்பர் என தெரியவில்லை. சபாநாயகரின் ஒப்புதல் பெற்று எந்த விஷயங்கள் குறித்து ஆலோசித்தாலும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது.
முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்கும் சர்ச்சையால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தத்தில் இருப்பது, என் கவனத்துக்கு வரவில்லை. அவரை நான் டில்லியில் சந்தித்த போது, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.