ஹிந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் குற்றச்சாட்டு
ஹிந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் குற்றச்சாட்டு
ADDED : மே 09, 2024 05:26 PM

புதுடில்லி: 'ஹிந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லீம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் தொகை தொடர்பான பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை குறித்து, கிரிராஜ் சிங் கூறியதாவது: இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால் முஸ்லீம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்கணும்!
இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கில் இருப்பவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் உள்ளனர் என காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.