காந்தி குறித்த பிரதமரின் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
காந்தி குறித்த பிரதமரின் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
ADDED : மே 30, 2024 01:51 AM
புதுடில்லி, மகாத்மா காந்தி குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கு, 'பொய், மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பும் நேரம் வந்துவிட்டது' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி தந்துள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'இந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை உலகம் முழுதும் அறிய செய்திருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது இல்லையா? ஆனால் காந்தி திரைப்படம் வெளிவரும் வரை அவரை யாருக்கும் தெரியாது' என கூறினார். பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே உள்ளிட்டவர்களை சித்தாந்த முன்னோடியாக கொண்டவர்களால் காந்தி காட்டிய உண்மையின் பாதையை ஒருபோதும் பின்பற்ற முடியாது. பொய், தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு செல்லும் நேரம் வந்துவிட்டது,'' என கூறினார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், “அரசியல் அறிவியல் பாடத்தின் மாணவனுக்கு மட்டுமே, காந்தியை பற்றி தெரிந்துகொள்ள காந்தி திரைப்படத்தை பார்க்க வேண்டிய தேவை இருக்கும்,” என்றார்.