ஷிகாவி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்
ஷிகாவி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்
ADDED : ஜூலை 06, 2024 05:51 AM

ஹாவேரி: ஷிகாவி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட, கட்சியின் மாநில பொது செயலர் ராஜேஸ்வரி பாட்டீல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாவேரி ஷிகாவி தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பசவராஜ் பொம்மை. லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் ராஜேஸ்வரி பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2013ல் இருந்து கட்சிக்காக உழைக்கிறேன். ஷிகாவி தொகுதியில் கட்சியை வளர்க்க பாடுபட்டுள்ளேன்.
லோக்சபா தேர்தலிலும் ஹாவேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தேன். என் குடும்ப உறுப்பினர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். பல்வேறு சமூக சேவைகளையும் செய்து இருக்கிறேன்.
ஷிகாவி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சங்கரும், ஷிகாவி தொகுதி சீட் எதிர்பார்க்கிறார். நேற்று அவர் அளித்த பேட்டியில், ''ஷிகாவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரும்படி, முதல்வர், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
''கட்சியின் தொண்டர்களுடன் விவாதித்து உள்ளேன். ஷிகாவியில் இருந்து என் வீடு, 60 கி.மீ.,யில் தான் உள்ளது. சீட் கொடுத்தால் வெற்றி பெற்று காட்டுவேன்,'' என்றார்.