இலவச திருமண விழாவில் காங்., - எம்.எல்.ஏ., வாரிசுகள்
இலவச திருமண விழாவில் காங்., - எம்.எல்.ஏ., வாரிசுகள்
ADDED : பிப் 24, 2025 05:09 AM

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருவர் சம்பந்தி ஆகி உள்ளனர். அரசு நடத்திய இலவச திருமணத்தில் இவரது வாரிசுகள் திருமணம் செய்து கொண்டனர்.
கர்நாடக அரசியல்வாதிகளின் குடும்ப திருமணங்கள், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் தடபுடலாக நடப்பதை நிறைய முறைய பார்த்து இருப்போம். இதற்கு மாறாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தங்கள் பிள்ளைகளுக்கு எளிய முறையில் திருமணம் நடத்தி உள்ளனர்.
ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் மகள் ஐஸ்வர்யாவுக்கும், ராய்ச்சூரின் மஸ்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா துருவிஹால் மகன் சதீஷுக்கும் திருமணம் செய்ய, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் துருவிஹாலில் உள்ள அமோகசித்தேஸ்வரா மடத்தில் அரசு சார்பில் 75 ஏழை ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடந்தது.
இதில் ஒரு ஜோடி சதீஷ் - ஐஸ்வர்யா ஆவர். இந்த திருமணத்தில் அமைச்சர்கள் சரணபிரகாஷ் பாட்டீல், போசராஜ் கலந்து கொண்டு அனைத்து புதுமண தம்பதியையும் வாழ்த்தினர்.

