மாலுாரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா 'கிலி'
மாலுாரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா 'கிலி'
ADDED : ஆக 13, 2024 07:34 AM

மாலுார்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க மாலுார் தொகுதியில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கோலார் மாவட்டம், மாலுார் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத் கவுடா, காங்கிரஸ் சார்பில் நஞ்சேகவுடா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வழக்கு
ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது, மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. ஒரு சுற்றில் நஞ்சேகவுடாவும், மற்றொரு சுற்றில் மஞ்சுநாத் கவுடாவும் முன்னிலை வகித்தனர்.
இறுதி சுற்றில் காங்கிரசின் நஞ்சேகவுடா 50,955 ஓட்டுகளும், பா.ஜ.,வின் மஞ்சுநாத் கவுடா 50,707 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். நஞ்சேகவுடா வெறும் 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். எனவே மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி, மஞ்சுநாத் கவுடா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மாலுார் தொகுதியில் பதிவான ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்தி, ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கோலார் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஓட்டு எண்ணிக்கை நடத்த, மாவட்ட நிர்வாகம் தயாராகிறது.
கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் இருந்து, மாலுார் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இன்று வெளியே எடுக்கப்படுகின்றன. இதற்காக, மாநில தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கலெக்டர் கடிதம்
இன்று, கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மறு ஓட்டு எண்ணிக்கையின்போது, ஆஜராகும்படி, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., - பி.எஸ்.பி., ஆம் ஆத்மி என, அங்கீகாரம் பெற்ற முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, கோலார் கலெக்டர் அக்ரம் பாஷா கடிதம் எழுதி உள்ளார்.
மறு ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா கலக்கத்தில் உள்ளார்.

