அரசு கட்டடங்களுக்கு தீ வைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., கைது
அரசு கட்டடங்களுக்கு தீ வைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., கைது
ADDED : ஆக 19, 2024 12:31 AM
பலோடாபஜார்: சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோடாபஜார் - பதாபாரா மாவட்டத்தில் கிரித்புரி தாமில் உள்ள சத்னாமி சமூகத்தின் நினைவு சின்னம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
இதை கண்டித்து அந்த சமூகத்தினர், ஜூன் 10ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது, அரசு கட்டடங்கள், 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வன்முறை வெடித்ததை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
போராட்டத்தின் போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது தொடர்பாக, எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவுக்கு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
நேரில் ஆஜராகாததை அடுத்து, நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், கலவரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

