ADDED : மார் 25, 2024 06:31 AM
பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். இந்த கோட்டையை தகர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், தொகுதியை பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
கடந்த 2008ல், பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதி உருவானது. பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கில் இருந்து, சில தொகுதிகளை பிரித்து, பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதியாக உருவானது.
மன்சூர் அலிகான்
2009ல் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சாங்க்லியானா, பா.ஜ., வேட்பாளராக மோகன் களமிறங்கினார். இதில் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், மோகன் பெற்று எம்.பி.,யானார்.
அடுத்து 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், ரிஸ்வான் ஹர்ஷத்தை காங்., களமிறக்கியது. ஆனால் இரண்டு தேர்தல்களிலும், மோகன் வெற்றி பெற்றார். இம்முறையும் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க மோகன் முயற்சிக்கிறார்.
தேர்தலுக்கு தயாராகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், முஸ்லிம் தலைவர் மன்சூர் அலிகானை களமிறக்கியுள்ளது. பெங்களூரு சென்ட்ரலை கைப்பற்ற, இரண்டு கட்சிகளும் திட்டங்கள் வகுக்கின்றன.
கவுரவ பிரச்னை
பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதியில், எட்டு சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளது.
சிவாஜி நகர், சாந்திநகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட், சர்வக்ஞநகர் என, ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
சர்வக்ஞ நகரின் ஜார்ஜ், காந்தி நகரின் தினேஷ் குண்டுராவ், சாம்ராஜ்பேட்டின் ஜமீர் அகமது கான் ஆகியோர், சித்தராமையா அமைசரவையில் இடம் பெற்றுள்ளனர்.
வாக்குறுதி திட்டங்களின் பயனாக, சட்டசபை தேர்தல் நிலத்தில், காங்., அதிகமாகவே அறுவடை செய்தது. இதே போன்று லோக்சபா தொகுதியில், நன்றாக மகசூலை அள்ள கட்சி விரும்புகிறது. தொகுதியை கைப்பற்றுவது, காங்கிரசுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது.
தமிழர் பங்களிப்பு
பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில், 5.50 லட்சம் தமிழர்கள் உள்ளனர். வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில், தமிழர்களின் பங்களிப்பு அதிகம்.
அதேபோன்று 4.50 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இங்கு பா.ஜ., ஆழமாகவே வேரூன்றியுள்ளது. இதை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. மோகன் தனக்கென ஓட்டு வங்கி வைத்துள்ளார்.
காங்கிரஸ் சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பியுள்ளது. இவர்களின் ஓட்டுகளுடன், தமிழர்களின் ஓட்டுகளையும் ஈர்த்து, பெங்களூரு சென்ட்ரல் தொகுதியை பா.ஜ.,விடம் இருந்து தட்டி பறிக்க, ஆளுங்கட்சி திட்டம் வகுத்துஉள்ளது.- நமது நிருபர் -

