மைசூரில் இன்று காங்., போராட்டம்: எதிர்க்கட்சி நாளை பொதுக்கூட்டம்
மைசூரில் இன்று காங்., போராட்டம்: எதிர்க்கட்சி நாளை பொதுக்கூட்டம்
ADDED : ஆக 09, 2024 12:37 AM

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா கோரி, எதிர்க்கட்சியினர் நடத்தும் பாதயாத்திரை, மைசூரில் நாளை, பொதுக் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
அவர்களுக்கு எதிராக, அவர்களை முந்திக் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் இன்று மைசூரில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்துகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
பாதயாத்திரை
இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியும், பெங்களூரில் இருந்து, மைசூரு வரை, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் இணைந்து, இம்மாதம் 3ம் தேதி பாதயாத்திரை துவங்கினர்.
எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை நடத்தும் ஒவ்வொரு நகரிலும், ஒரு நாள் முன்னதாக காங்., சார்பில் போராட்டம் நடத்தி, பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விளக்கி வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சியினரின் பாதயாத்திரை, மைசூரில் நாளை நிறைவு பெறுகிறது.
மைசூரின் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில், நாளை பிரமாண்ட பொது கூட்டம் நடத்தி, காங்கிரஸ் ஆட்சி முறைகேடுகள் குறித்து பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் விளக்கி பேச உள்ளனர்.
பலத்தை காட்ட
இதற்கிடையில், அதே மைதானத்தில் ஒரு நாள் முன்னதாக, அதாவது இன்று காங்கிரஸ் பொது கூட்டம் நடத்துகிறது.
பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள், ம.ஜ.த., தலைவர்களின் சொத்து பட்டியல் ஆகியவற்றை விளக்க காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
பொது கூட்டம் நடக்கும் மைதானத்தில், இறுதிக்கட்ட ஏற்பாடுகளை, துணை முதல்வர் சிவகுமார் நேற்றிரவு ஆய்வு செய்தார்.
முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேற்றே மைசூருக்கு வந்து விட்டனர். முக்கியமான ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் காங்கிரசாரால் நிரம்பி வழிகின்றன.
இரு தரப்பிலுமே ஏராளமான தொண்டர்களை திரட்டி, பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, மைசூரு, குடகு, சாம்ராஜ் நகர், மாண்டியா ஆகிய நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.