தலித் பணத்தை கொள்ளை அடிக்கும் காங்கிரஸ்: பசனகவுடா குற்றச்சாட்டு
தலித் பணத்தை கொள்ளை அடிக்கும் காங்கிரஸ்: பசனகவுடா குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2024 06:41 AM

விஜயபுரா: “தலித் சமுதாயத்தின் பணத்தை காங்., கட்சியினர் கொள்ளை அடிக்கின்றனர்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், முதல்வரை அந்தந்த கட்சிகளின் மேலிடம் முடிவு செய்யும். அது மடாதிபதிகளின் வேலை அல்ல. இவர்கள், சமுதாயத்தை திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
மாநில காங்கிரஸ் அரசு, ஊழலில் மூழ்கியுள்ளது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 187 கோடி ரூபாய் முறைகேட்டில், நாகேந்திரா மட்டும் ராஜினாமா செய்தால் போதாது. நிதித்துறை அமைச்சருமான முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு வராமல், இந்த முறைகேடு நடந்திருக்காது. அவரும் முறைகேட்டுக்கு பொறுப்பாளர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் முறைகேட்டுக்கு, டில்லி வரை தொடர்புள்ளது. எனவே இதுதொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளின் ஆதரவாளர்கள் என, போஸ் கொடுக்கும் காங்கிரஸ், மத்தியில் பா.ஜ.,வுக்கு 400க்கும் அதிகமான தொகுதிகள் கிடைத்தால், அரசியல் சாசனத்தை மாற்றும் என, அவப்பிரசாரம் செய்தது.
இப்போது தலித் சமுதாயத்தின் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.கல்யாண கர்நாடகா பகுதி மக்கள், பல கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.
இப்பகுதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை யாராலும் நீக்க முடியாது. ஒருவேளை நீக்க முற்பட்டால், தனி மாநிலம் கேட்போம். நிஜாம்கள் ஆட்சிக் காலத்தில், கல்யாண கர்நாடகா பகுதியின், ஹிந்து கோவில்கள் அழிக்கப்பட்டன. விஜயபுராவின், கலகேரி, அலமேலா வரை நிஜாம் வந்திருந்தார்.
விஜயபுரா மாவட்டத்தை, கல்யாண கர்நாடகாவில் சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மாற்றம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதை நான் ஏற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.