காங்., சமாஜ்வாதி கட்சியின் நோக்கம் நல்லவை அல்ல: மோடி விளாசல்
காங்., சமாஜ்வாதி கட்சியின் நோக்கம் நல்லவை அல்ல: மோடி விளாசல்
ADDED : மே 05, 2024 04:57 PM

லக்னோ: 'சமாஜ்வாதி மற்றும் காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய். அவர்களின் நோக்கங்கள் நல்லவை அல்ல' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, உங்களிடம் ஆசி பெறுவதற்காக இன்று இங்கு வந்துள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் எனது கடின உழைப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றன. நானும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மக்களுக்காக உழைக்கிறோம்.
காங்கிரசின் வாக்குறுதிகள் பொய்
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி தங்கள் குடும்பங்கள் மற்றும் ஓட்டு வங்கிகளுக்காக மட்டுமே செயல்படுகின்றன. சமாஜ்வாதி மற்றும் காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய். அவர்களின் நோக்கங்கள் நல்லவை அல்ல. இப்போது நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் குறித்து பொய்களை பரப்புவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது என்று நமது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.
இடஒதுக்கீடு
இப்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., இடஒதுக்கீட்டைப் பறித்து மத அடிப்படையில் பகிர்ந்தளிக்க காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது. கொரோனா காலத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற நாட்டின் விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆனால் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதை இழிவுபடுத்தினர். ஆனால் அவர்கள் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.