காங்., மாநில தலைவர் பதவி? சதீஷ் ஜார்கிஹோளி மறுப்பு!
காங்., மாநில தலைவர் பதவி? சதீஷ் ஜார்கிஹோளி மறுப்பு!
ADDED : மே 22, 2024 10:50 PM

பெங்களூரு: 'கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை,'' என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக துணை முதல்வர் சிவகுமார் உள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட சிலர், தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சதீஷ் ஜார்கிஹோளி பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
சிவகுமார் தற்போது மாநில தலைவராக உள்ளார். அந்த பதவி இன்னும் காலியாகவில்லை. தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.
அந்த பதவியை திறமையானவர்களுக்கு கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன். மேலவை தேர்தலில் 'சீட்' ஒதுக்கீட்டில், வடமாவட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு குறைந்தது, இரண்டு சீட் ஒதுக்கும்படி கேட்கிறேன். இதன்மூலம் கட்சிக்கு லாபம் கிடைக்கும்.
கர்நாடகாவில் இருந்து, பிரதமர் பதவிக்கான போட்டியில் யாரும் இல்லை என்று, முதல்வர் சித்தராமையா கூறியது பற்றி எனக்கு தெரியாது.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் ஆகும் அனைத்து தகுதியும் உள்ளது. 'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கு நாங்கள் உரிமை கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
