துணை முதல்வர் சிவகுமாருக்கு காங்., திடீர் எதிர்ப்பு
துணை முதல்வர் சிவகுமாருக்கு காங்., திடீர் எதிர்ப்பு
ADDED : பிப் 28, 2025 05:55 AM
ஈஷா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் துணை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டது மாநில காங்கிரசில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநில காங்கிரசில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்து வருகிறது. முதல்வர் பதவிக்கான போட்டி சூடுபிடித்து உள்ளது.
'முதல்வர் பதவியை அடைந்த தீருவேன்' என துணை முதல்வரும், கட்சி மாநில தலைவருமான சிவகுமார் சபதம் போட்டு உள்ளார். இதற்காக சிவகுமார் பல 'ஸ்டன்டு'களை செய்து வருகிறார்.
தேசியம்
தற்போது, மாநிலம் கடந்து தேசிய அளவில் களம் இறங்கி உள்ளார். சமீபத்தில் டில்லிக்கு தனியாக சென்று, கட்சி மேலிட தலைவர்களிடம் பேசினார். இது, மாநில காங்கிரசில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சித்தராமையா கோஷ்டியினர் பீதி அடைந்தனர்.   டில்லி தலைவர்களிடம் முதல்வர் பதவி குறித்தே சிவகுமார் பேசியதாக பேச்சுகள் அடிபட்டன.
'இது போதாது' என்று பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவிற்கு சென்று, ஒரு குளியலை போட்டார். அதை வீடியோவாக எடுத்து, இணையத்திலும் பதிவிட்டார். இதுவும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழகத்தில் கோவையில் நடந்த ஈஷா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து சிவகுமார், தன் 'எக்ஸ்' பக்கத்தில், சத்குருவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டார். இந்த பதிவும், மாநில காங்கிரசில் பூகம்பத்தை கிளப்பியது.
தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செயலர் மோகன் பொது வெளியில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தவறு
'ராகுலை கேலி செய்த ஒருவருக்கு எப்படி நன்றி கூறுகிறீர்கள். மதச்சார்பற்ற கட்சியின் தலைராக இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, கட்சியின் அடிப்படையை சீண்டி பார்க்கிறது. இது கட்சி தொண்டர்களை தவறான வழியில் வழிநடத்தும் செயலாக உள்ளது' என்றார்.
இதனால், சிவகுமார் மீது கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு, பலரும் துணை முதல்வராக ஆசைப்படுகின்றனர்.
சிவகுமார் பா.ஜ.,வுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், தன் கோஷ்டியினருடன் சேர்ந்து பா.ஜ.,விற்கு தாவுவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட துவங்கி உள்ளது. இதன் பின்னணியில் பா.ஜ., உள்ளதாக, முக்கிய தலைவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், வழக்கம் போல் சிவகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்
.

