ADDED : மே 05, 2024 05:55 AM
பெங்களூரு: ஹிந்துக்களை பற்றி அவமதிப்பாக பேசிய, காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். இவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராய்ச்சூர் நகராட்சி அதிகாரிகளை, காங்கிரஸ் பிரமுகர் பஷிருதீன், நேற்று முன் தினம் சந்தித்தார்; ஆலோசனை நடத்தினார். அதன்பின் ஊடகத்தினர், தொண்டர்கள் முன்னிலையில், 'யாராவது ஜெய் ஸ்ரீராம் என, கோஷமிட்டால் அவர்களை போலீசார் பூட்ஸ் கால்களால் உதைத்து, உள்ளே தள்ளுங்கள்' என கூறினார்.
இதனால் கொதித்தெழுந்த பா.ஜ.,வினர், பஷிருதீனை கண்டித்தனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பஷிருதீன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.
இதை தீவிரமாக கருதிய, மாநில காங்கிரஸ் ஒழுங்கு கமிட்டி, பஷிருதீனை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து, நேற்று உத்தரவிட்டது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
'உணர்வுப்பூர்வமான விஷயங்களை பற்றி பேசக்கூடாது என, மாநில காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கும், தலைவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
'நீங்கள் பேசியது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. எனவே உங்களை கட்சியில் இருந்து, இடைநீக்கம் செய்துள்ளோம். நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.