ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சு
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சு
ADDED : ஆக 20, 2024 12:11 AM

ஸ்ரீநகர் :சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக, தேசியவாத காங்., மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சு துவங்கியுள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் காங்., தலைவர் தாரிக் ஹமீத் காரா தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், 90 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதி என, மூன்று கட்டமாக நடக்க உள்ளது. அக்., 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
பேச்சு துவக்கம்
ஜம்மு - காஷ்மீர் காங்., தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.,யான தாரிக் ஹமீத் காரா நேற்று கூறியதாவது:
மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக ஒருமித்த கருத்துள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டி' கூட்டணியை உருவாக்கின. இதில், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சிகளும் உள்ளன. எந்த நோக்கத்துக்காக அந்த கூட்டணி உருவாக்கப்பட்டதோ, அது சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும். இணைந்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.
இது தொடர்பாக, இந்த கட்சிகளுடனான பேச்சு துவங்கியுள்ளது. இதற்காக, காங்.,கில், ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுகள் தற்போதுதான் துவங்கியுள்ளன.
அதனால், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். ஜம்மு - காஷ்மீர் நலன் மற்றும் கட்சியின் நலனை பாதுகாக்க, ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்., தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கை
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் அறிக்கையை, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று வெளியிட்டார். அதில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடவடிக்கையை எடுப்போம்.
'ஜம்மு - காஷ்மீருக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். மாநில அந்தஸ்து திரும்ப பெறப்படும்' என்பது உட்பட, 12 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.