கர்நாடகாவை அச்சுறுத்தும் காங்., அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகாவை அச்சுறுத்தும் காங்., அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : மே 02, 2024 06:39 AM

ஹூப்பள்ளி: ஓட்டுகள் பெறுவதற்காக கர்நாடகாவை காங்கிரஸ் அச்சுறுத்தி வருவதாக, ஹூப்பள்ளி பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கர்நாடகா வந்தார். ஹாவேரி பா.ஜ., வேட்பாளரான பசவராஜ் பொம்மையை ஆதரித்து, 'ரோடு ஷோ' நடத்தினார்.
நேரு மைதானம்
பின், தார்வாட் வந்த அவர், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை ஆதரித்து ஹூப்பள்ளி டவுன் நேரு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை, தார்வாட் மக்கள் ஐந்தாவது முறையாக வெற்றி பெற வைக்க வேண்டும். ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு பாடம் புகட்ட, மாநிலத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெறும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, 'மோடி, மோடி' என்ற கோஷம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. பிரஹலாத் ஜோஷியை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அடுத்த முறை அவரை எதிர்த்து போட்டியிட, எதிர் அணியினர் பயப்பட வேண்டும்.
காஷ்மீருக்கும், நமக்கும் என்ன உறவு என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்கிறார். காஷ்மீருக்காக உயிரை கொடுக்க, நமது மக்கள் தயாராக உள்ளனர்.
'காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தால், ரத்த ஆறு ஓடும்' என்று மிரட்டினர். ஆனால் சட்டப் பிரிவு ரத்து செய்து, ஐந்து ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்தவர் பிரதமர் மோடி.
காது பரிசோதனை
'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் குண்டுவெடிப்பை, சிலிண்டர் வெடிப்பு என்று சித்திகரிக்க முயன்றனர். என்.ஐ.ஏ., விசாரணைக்கு பின்னர், குண்டுவெடிப்பு என்று தெரிந்தது. கர்நாடக முதல்வர், துணை முதல்வர் இடையில் 'பனிப்போர்' நடக்கிறது. பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., நிற்காது. ஹூப்பள்ளி கல்லுாரி மாணவி நேஹா கொலைக்கு யார் காரணம்?
கர்நாடக பெண்களுக்கு, காங்கிரஸ் அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாது. விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது. அப்படி கோஷம் எழுப்பியதாக காதில் கேட்கவில்லை என, முதல்வர் சித்தராமையா கூறினார். காதுகள் கேட்கவில்லை என்றால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில், காங்கிரஸ் அரசியல் செய்தது. கோவிலை கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு, ராகுல், சோனியா, கார்கேவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. முஸ்லிம்கள் ஓட்டு வங்கிக்காக வரவில்லை. அப்படிப்பட்ட கட்சிக்கு ஓட்டு போட வேண்டுமா? ஓட்டு பெறுவதற்காக, கர்நாடகாவை அச்சுறுத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது. இதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

