பொருளாதார ஆலோசகருக்கு காங்., - எம்.எல்.சி., கண்டனம்
பொருளாதார ஆலோசகருக்கு காங்., - எம்.எல்.சி., கண்டனம்
ADDED : ஜூலை 15, 2024 04:47 AM

பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. திட்டங்களுக்கு 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுவதால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுங்கட்சியினரே பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.
முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி, 'வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியதால், மாநிலம் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. தொகுதி வளர்ச்சி நிதி வழங்க முடியவில்லை. நான் முதல்வரின் பொருளாதார ஆலோசகர் என்பதால், என் தொகுதிக்கு மட்டும் நிதி கிடைத்தது' என கூறியிருந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா, நேற்று அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கு முன், வெளியிட்ட வாக்குறுதி அறிக்கையில், ஐந்து முக்கியமான திட்டங்கள் உட்பட பல வாக்குறுதிகளை கட்சி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகளை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் நிறைவேற்றுகின்றனர்.
மாநிலத்தில் அனைத்து வளர்ச்சி பணிகளும், நல்ல முறையில் நடக்கின்றன. இச்சூழ்நிலையில், மாநிலம் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதாக, முதல்வரின் ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, கூறியிருக்க கூடாது.
மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி காணப்பட்டது. அரசின் வாக்குறுதி திட்டங்களால், மக்களுக்கு வறட்சி பாதிப்பின் தாக்கம் அவ்வளவாக ஏற்படவில்லை. இந்த திட்டங்களை மக்களே கொண்டாடுகின்றனர். ராயரெட்டி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது சரியல்ல.
இவ்வாறு அவர்கூறினார்.