வாரிசுகள் வெற்றி பெறாவிட்டால் பதவி பறிப்பு அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் எச்சரிக்கை
வாரிசுகள் வெற்றி பெறாவிட்டால் பதவி பறிப்பு அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் எச்சரிக்கை
ADDED : மார் 23, 2024 06:52 AM
'மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுத்து தங்கள் குடும்பத்தினருக்கு, 'சீட்' பெற்ற அமைச்சர்கள், வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்., மேலிடம் எச்சரித்துள்ளது. இது அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஏழு தொகுதிகள், இரண்டாம் கட்டத்தில் 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதற்கு முன் வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில், அமைச்சர்களை களமிறங்கும்படி காங்., மேலிடம் அறிவுறுத்தியது. ஆனால் இவர்கள் போட்டியிட மறுத்து, தங்கள் குடும்பத்தினருக்கு 'சீட்' கேட்டனர்.
பலன் இல்லை
பல சுற்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அமைச்சர்களின் மனதை கரைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. தேசிய அரசியலுக்கு செல்ல முடியாது என, கூறிவிட்டனர். வேறு வழியின்றி இவர்களின் குடும்பத்தினருக்கு சீட் கொடுத்தது.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, சிக்கோடி தொகுதியில் தன் மகள் பிரியங்கா; பெலகாவியில் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள்; பீதரில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தன் மகன் சாகர் கன்ட்ரேவுக்கு சீட் பெற்றுள்ளனர்.
பாகல்கோட்டில், சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்தபாட்டீல் தன் மகள் சம்யுக்தா; தாவணகெரேவில், அமைச்சர் மல்லிகார்ஜுன் தன் மனைவி பிரபா, பெங்களூரு தெற்கில் அமைச்சர் ராமலிங்கரெட்டி தன் மகள் சவும்யாவுக்கு சீட் பெற்றனர். அமைச்சர் மது பங்காரப்பாவின் சகோதரி கீதா சிவராஜ்குமார், ஷிவமொகாவில் போட்டியிடுகிறார்.
கலபுரகியில் மல்லிகார்ஜுன கார்கேயின் மருமகன் ராதா கிருஷ்ணாவை களமிறக்கி உள்ளார். இது போன்று, பல தொகுதிகளில் குடும்பத்தினரே களத்தில் உள்ளனர்.
மேலிடம் நிபந்தனை
போராடி சீட் பெற்றாலும், அமைச்சர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடியாது. ஏனென்றால் தங்கள் மகன், மகள், மனைவியை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்., மேலிடம் நிபந்தனை விதித்துள்ளது.
வேட்பாளர்கள் தோற்றால், பதவி பறிபோகும். எனவே அமைச்சர்களின் நிலை இருதலை கொள்ளி எறும்பாய் உள்ளது.
மற்ற தலைவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அமைச்சர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு சீட் பெற்றிருப்பது, கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு பற்றி எரியும் என்பது தெரியவில்லை. அமைச்சர்களின் குடும்பத்தினரை தோற்கடிக்க, சொந்த கட்சியினரே தயாராகின்றனர். இவர்களை சமாளித்து வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது, அமைச்சர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.- நமது நிருபர் -

