பொய்யான பிரசாரம் செய்யும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு
பொய்யான பிரசாரம் செய்யும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 05, 2024 06:19 AM

பெங்களூரு: ''தேர்தலின் போது, அரசியலமைப்பை பா.ஜ., மாற்றும் என, பொய்யான பிரசாரம் செய்தனர்,'' என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில், நேற்று நடந்த மாநில பா.ஜ., செயற்குழு கூட்டத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த, காங்கிரஸ் முற்பட்டுள்ளது. 1975ல் அவசர சூழ்நிலையை திணித்தது. அந்த நாட்கள் கறுப்பு நாட்கள். எங்கள் கட்சி தொண்டர்கள், தலைவர்களை கைது செய்தது.
இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் படுகொலை. பெங்களூரு சிறையில், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் அடைக்கப்பட்டனர்.
ஜனசங்கம்
அவசர சூழ்நிலைக்கு எதிராக, பா.ஜ., போராடியது. ஜனநாயகத்தை காப்பாற்றியது. ஜனநாயகம் நான்கு துாண்களின் மத்தியில் நின்றுள்ளது. இவற்றை பற்றி அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை அலட்சியப்படுத்தி, பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு, அவசர சூழ்நிலை குறித்து தெரியாது. அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தேன். அவசர சூழ்நிலையை கண்டித்து போராடினேன். இதனால் எனக்கு குறைந்த மதிப்பெண் வந்தது. எனவே என்னால் பொறியியல் படிக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தினர், என் மீது கோபம் கொண்டனர்.
ஆனால் இப்போது எனக்கு, பல விருதுகள் கிடைத்துள்ளன. ஜனநாயகத்தை மறக்காமல், அரசியல் சாசனத்தை பலப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்தை கொலை செய்தவர்கள், யார் என்பதை இளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற, பா.ஜ., எப்போதும் தயாராக இருக்கும் என, மக்களுக்கு தெரிய வேண்டும். எங்களுடையது குடும்பம் அடிப்படையிலான கட்சி அல்ல.
நேருவில் துவங்கி, ராகுல் வரை காங்கிரஸ் குடும்பம் அடிப்படையிலான கட்சியாகும். வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்றி, அவர்களின் கைத்தடிகளின் வறுமை ஒழிந்தது.
காங்கிரஸ் குடும்பம்
மத்திய பா.ஜ., அரசு, 10 கோடிக்கும் அதிகமான காஸ் சிலிண்டர் இணைப்பு அளித்தது. காங்கிரஸ் பொய்யான பிரசாரம் செய்யும் கட்சியாகும். எங்களுடையது ஜாதியவாத கட்சியல்ல. எங்கள் கட்சி பாரபட்சம் பார்ப்பதில்லை. பார்லிமென்ட்டில் ஹிந்து வார்த்தையை ராகுல் விமர்சித்தது துரதிர்ஷ்டவசம்.
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள், விரைவில் முடிவடையும். விவசாயம், தொழிற்துறையை பலப்படுத்தினோம். உள்நாட்டு உற்பத்திகளை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிக்கோள்
நாம் சவால்களை எதிர் கொண்டு, முன்னேறி செல்லலாம். இந்தியாவை உலகத்தின் குருவாக உயர்த்துவது, எங்களின் குறிக்கோளாகும். உங்களை போன்ற வலுவான தொண்டர்கள் கிடைத்திருப்பது, எங்களின் பாக்கியம். எம்.பி.,க்கள் மாஜிக்களாகலாம். ஆனால் தொண்டர்கள் எப்போதும் மாஜிக்கள் ஆவதில்லை.
அதிகாரம் வரும், போகும். இது பற்றி சிந்திக்காதீர்கள். சூர்யோதயம், சூர்ய அஸ்தமனம் சகஜம். இந்தியாவை உலகின் தலைவனாக கொண்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.