காங்., பின்னணிக்கு வேறென்ன சான்று தேவை: கேட்கிறார் மல்யுத்த சம்மேளன தலைவர்
காங்., பின்னணிக்கு வேறென்ன சான்று தேவை: கேட்கிறார் மல்யுத்த சம்மேளன தலைவர்
ADDED : செப் 07, 2024 02:07 PM

புதுடில்லி: 'மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது' என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரசில் இணைந்தனர். இது குறித்து, மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரசில் இணைந்தது, போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது என்பதற்கு சான்றாகும். முழு போராட்டமும் காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பேரில் தான் நடந்துள்ளது. முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பா.ஜ.,வுடன் தொடர்புடையவர்.
அரசியல் உள்நோக்கம்
நான் எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் என்னையும் மல்யுத்த வீரர்கள் எதிர்த்தனர். இந்த போராட்டம் முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு மூளையாக ஹூடா குடும்பத்தை சேர்ந்தவர்கள் செயல்பட்டனர். போராட்டத்தை கண்டு பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் விலகிவிட்டார்.
எனவே பிரச்னை அப்பொழுது முடிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் சதி காரணமாக முடிவுக்கு வரவில்லை. ஒலிம்பிக்கில் இரண்டு வருடங்களாக மல்யுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்கள் மல்யுத்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சதி திட்டமா?
பாலியல் குற்றச்சாட்டிற்கு எதிராக, டில்லியில் வீதியில் இறங்கி மல்யுத்த வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராடினர். ஆனால் தற்போது வினேஷ், பஜ்ரங் காங்கிரசில் இணைந்துவிட்டதால், போராட்டம் எல்லாம் ஒரு சதி திட்டம் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.