காங்.,கிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காதுவிளாசல்! ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
காங்.,கிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காதுவிளாசல்! ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ADDED : மே 12, 2024 12:36 AM

'போலங்கிர், 'லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்காது,'' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 147 சட்டசபை தொகுதிகளுக்கும், 21 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை துவங்கி, ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், கந்தமால் மற்றும் போலங்கிர் லோக்சபா தொகுதிகளில், நேற்று நடந்த பொதுக்கூட்டங்களில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பேசியதாவது:
ஆபத்தில் உள்ள ஒடிசாவின் பெருமையை, பா.ஜ., பாதுகாக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் அரசு அமையும். ஒடிசாவில், பா.ஜ., ஆட்சி அமைகிற நாள் வெகு தொலைவில் இல்லை.
தகுதி இல்லையா?
ஒடியா மொழி மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளும் மண்ணின் மகன் அல்லது மகள், முதல்வராக நியமிக்கப்படுவார்.
ஒடிசாவில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தும், மக்களை ஏழைகளாகவே, ஆளும் பிஜு ஜனதா தளம் வைத்திருக்கிறது. இக்கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிய வேண்டும்.
ஒடிசாவில், எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உள்ள நிலையில், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கூறிக்கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன் ஆட்சியை நடத்தி வருகிறார்.
இங்கு பிறந்து வளர்ந்தவர்களால் நிர்வாகம் செய்ய முடியாதா? நமக்கு அந்தத் தகுதி இல்லையா?
பழங்குடியினரின் நிலங்களை கொள்ளைஅடிப்பதில், பிஜு ஜனதா தளத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் 30 மாவட்டங்களின் பெயர்கள் கூட, முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தெரியவில்லை. இது ஒரு வெட்கக்கேடு. எந்த குறிப்பும் இல்லாமல், ஒடிசாவின் மாவட்டங்களையும், அவற்றின் தலைநகரையும் நவீன் பட்நாயக்கால் கூற முடியாது.
லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சியாக, காங்கிரசால் மாற முடியாது. அக்கட்சி, 10 சதவீத இடங்களை பெறாது; 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்; 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்.
வேடிக்கை
நாட்டின் நலனுக்காக பணியாற்றாமல், ஓட்டு வங்கி ஒன்றையே குறிக்கோளாக வைத்து, காங்., செயல்படுகிறது. இதனால் நம் நாடு பல்வேறு தடைகளை எதிர்கொண்டது.
ஆட்சியில் இருந்த போது, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாமல் காங்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ., அரசு அமைந்தவுடன், அங்கு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்தன. எதிர்பாராத அளவுக்கு அங்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமைதியாக இருக்கும்படி, காங்., நம்மிடம் கூறி வருகிறது. இவர்கள் பயப்படுவது மட்டுமல்லாமல், மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானிடம் உள்ள வெடிகுண்டுகள் தரமற்றவை; வேலைக்கு ஆகாதவை. இது, அந்நாட்டுக்கே நன்றாக தெரியும். பாகிஸ்தானின் வெடிகுண்டுகளை வாங்க ஒருவர் கூட முன்வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.