காங்., ரமேஷ்குமாருக்கு எம்.எல்.சி., பதவி கிடைக்குமா?
காங்., ரமேஷ்குமாருக்கு எம்.எல்.சி., பதவி கிடைக்குமா?
ADDED : மே 29, 2024 04:23 AM

பெங்களூரு, : எம்.எல்.சி., பதவி மீது, 'கண்' வைத்துள்ள முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசினார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கோலாரின், சீனிவாசபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரமேஷ்குமார், தோல்வி அடைந்தார். கோலாரை தவிர, மற்ற தொகுதிகளில் இவருக்கு செல்வாக்கு இல்லை. எனவே இவருக்கு சீட் கொடுப்பதில், காங்கிரஸ் மேலிடம் ஆர்வம் காண்பிக்கவில்லை.
கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள ரமேஷ்குமார், சபாநாயகராகவும் பதவி வகித்தவர். இதற்கு முன் காங்கிரஸ் அரசு இருந்த போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது எந்த பதவியும் இல்லாமல் பரிதவிக்கிறார்.
இதனால் மேலவை தேர்தலில், பார்வையை பதித்துள்ளார். ஏற்கனவே தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் இல்லத்துக்கு, ரமேஷ்குமார் நேற்று காலை சென்றார். தன்னை எம்.எல்.சி.,யாக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ரமேஷ்குமார், துணை முதல்வரை சந்தித்து உள்ளது பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது. இவ்விஷயத்தில் சித்தராமையாவின் ஆலோசனையும் இருக்கும் என்று கோலாரின் அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.