'வளர்ச்சி பணிகள் பூஜ்யமே காங்., தோல்விக்கு காரணம்'
'வளர்ச்சி பணிகள் பூஜ்யமே காங்., தோல்விக்கு காரணம்'
ADDED : ஜூன் 11, 2024 04:45 AM

பெங்களூரு: ''வாக்குறுதித் திட்டங்களால், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லை. அரசு திவாலாகி விட்டதால், வளர்ச்சிப் பணிகள் பூஜ்யமாக இருப்பதால், காங்., தோல்வி அடைந்துள்ளது,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குற்றஞ்சாட்டினார்.
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அமைச்சர்கள் வாரிசுகளே தோல்வி அடைந்தது, காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியது.
இதுகுறித்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
ஓட்டு பெறுவதற்காக, காங்கிரஸ் அரசு, வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தியது. இதன் விளைவாக தற்போது கடன் பெற்று, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதி
வாக்குறுதித் திட்டங்களால் தான் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரசால் முடியவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியை எப்போது தருவீர்கள் என, எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திவாலாகி உள்ள இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் பில் தொகை பாக்கி வைத்துள்ளது. முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, பள்ளி, மருத்துவமனை, நீர்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று மக்களே தோற்கடித்துள்ளனர். ஆட்சி அமைந்து, ஓராண்டு ஆகியும் வளர்ச்சிப் பணிகள் பூஜியம் என்று மக்களுக்கு தெரியும். எனவே காங்., தோல்வி அடைந்துள்ளது.
தலித் மக்களின் நிதியை கொள்ளை அடித்தவர்கள் காங்கிரசார். ஒரு அமைச்சர் கூட மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபடவில்லை. லோக்சபா தேர்தல் தோல்வியால், அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று பலரும் பீதியில் உள்ளனர்.
பெரிய தலைகள்
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் அமைச்சர் நாகேந்திரா மட்டுமின்றி, பெரிய தலைகள் உள்ளன. இவ்வளவு பெரிய தொகை முறைகேடு நடந்திருப்பது, முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியவில்லையா?
பிரதமர் நரேந்திர மோடி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மத்திய அமைச்சரவையில், அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளன.
பா.ஜ.,வுக்கு, தென் மாநிலங்களின் நுழைவு வாயில் கர்நாடகா. எனவே கூடுதல் அமைச்சர் பதவிகள், கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

