தர்மராய சுவாமி கோவில் நிலம் பாதுகாப்பு: அமைச்சர் திட்டவட்டம்
தர்மராய சுவாமி கோவில் நிலம் பாதுகாப்பு: அமைச்சர் திட்டவட்டம்
ADDED : ஜூலை 24, 2024 11:24 PM

பெங்களூரு : ''அடுத்த சட்டசபை கூட்டத்துக்குள், பெங்களூரின் தர்மராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கம்பி வேலி பொருத்தி ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவிகுமா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
பெங்களூரின் தர்மராய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான, 15.12 ஏக்கர் நிலத்தில், ஆறு ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அரசு சார்பில் தவறு நடந்துள்ளது. மிச்சமுள்ள நிலத்துக்கு கம்பி வேலி பொருத்தி, கோவிலிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
நிலத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட, முதல்வர் சித்தராமையா 80 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். சில காரணங்களால் சுற்றுச்சுவர் கட்ட முடியவில்லை.
நிலத்தை ஆக்கிரமித்த சிலர், நீதிமன்றத்துக்குச் சென்று தடையுத்தரவு பெற்று வந்துள்ளனர். அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை பெற்று, விரைவில் தடையுத்தரவு நீக்கப்படும். இதற்காக மூத்த வக்கீல்களை நியமிப்போம்.
கோவில் நிலத்தை 211 பேர் ஆக்கிரமித்துள்ளனர். எந்த காரணத்தை முன்னிட்டும், கோவில் நிலத்தை அபகரிக்க விடமாட்டோம்; நிலத்தை மீட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - ரவிகுமார்: அரசுக்கு, சரியான அட்வகேட் ஜெனரல் கிடைக்கவில்லையா? ஏற்கனவே நியமிக்கப்பட்டவரையே, மீண்டும் நியமிப்பது ஏன்? உங்களுக்கு உண்மையாகவே நிலத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இருந்தால், நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்த வேண்டும்.
ம.ஜ.த., - போஜேகவுடா: 35 ஆண்டுகளாக கோவில் நிலத்தை மீட்க முடியவில்லை என்றால் எப்படி? இது அரசின் அலட்சியத்தை காண்பிக்கிறது. நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

