குடிமக்களுக்கு கேள்வி கேட்க உரிமை வழங்கிய அரசியலமைப்பு: பிரியங்கா பேச்சு
குடிமக்களுக்கு கேள்வி கேட்க உரிமை வழங்கிய அரசியலமைப்பு: பிரியங்கா பேச்சு
UPDATED : மே 04, 2024 01:37 PM
ADDED : மே 04, 2024 01:36 PM

ஆமதாபாத்: அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு கேள்வி கேட்கவும் கிளர்ச்சி செய்யவும் உரிமை வழங்கியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: குஜராத் மக்கள் பிரதமர் மோடிக்கு மரியாதையையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர். அவர் பிரதமராக இருந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் அவரை பெரிய மேடைகளில் முதலாளிகள் மற்றும் பிற நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுடன் பார்த்திருப்பீர்கள்.
குஜராத் மண்
அவர் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஒரு விவசாயி அல்லது ஏழையின் வீட்டிற்கு எப்போதாவது சென்றுள்ளாரா?. பிரதமர் மோடி எந்த ஏழையின் வீட்டிற்கும் சென்றதில்லை. மகாத்மா காந்தி, ஸ்ரீ சர்தார் படேல் உள்ளிட்ட பல பெரிய மனிதர்கள் குஜராத் மண்ணில் பிறந்தவர்கள். சுதந்திரத்திற்காக நாட்டின் பல பெரிய மனிதர்கள் ஆங்கிலேயர் அரசை எதிர்த்துப் போராடினார்கள்.
உரிமைகளைப் பறிக்க முயற்சி
அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு கேள்வி கேட்கவும் கிளர்ச்சி செய்யவும் உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று பா.ஜ.., வினர் கூறும்போது, மக்களிடமிருந்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அரசியலமைப்புச் சட்டத்தைப் மாற்றினால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
அரண்மனை
காங்கிரஸ் எம்.பி., ராகுல் 4,000 கி.மீ. நடைப்பயணம் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை கேட்டறிந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரண்மனைகளில் வசிக்கிறார்.
விவசாயிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டத்தை அவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும்?. நரேந்திர மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவர்களை கண்டு பயப்படுகிறார்கள். அவர்களிடம் எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுகிறது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.