ADDED : மார் 15, 2025 05:14 AM

மைசூரு: மைசூரு நகரின் கியாத்தமாரனஹள்ளியில் உள்ள மசூதி தொடர்பான விஷயத்தில் 2016ல் ஹிந்து பிரமுகர் ராஜு படுகொலை செய்யப்பட்டார். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மசூதி மூடப்பட்டது.
ஆலோசனை
மசூதி திறப்பது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. சம்பந்தப்பட்டவர்கள், அப்பகுதியினருடன் பேசி, 12 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, கடந்த வாரம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஹிந்து அமைப்பு தலைவர்கள், முஸ்லிம் பிரமுகர்களுடன் மூடப்பட்ட அறையில், கலெக்டர் லட்சுமி காந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்குப் பின், கலெக்டர் கூறுகையில், ''கூட்டத்தில் இரு தரப்பு தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம், நீதிமன்றத்தில் இருப்பதால், மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.
அமைதி
முஸ்லிம் தரப்பில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சவுகத் பாஷா அளித்த பேட்டி:
கியாத்தமாரனஹள்ளி பகுதியில் மூடப்பட்டது மசூதி அல்ல; மதரசா தான். தற்போது சகஜ நிலை திரும்பி உள்ளது. நான்கு ஆண்டுகளாக, அறக்கட்டளை தான் மதரசாவை நடத்தி வந்தது. எனவே, மதரசாவை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் கேட்டுள்ளனர்.
கடந்த 2009ல் மைசூரு மாநகராட்சி அனுமதியுடன் இங்கு மதரசா நடத்த அறக்கட்டளையினர் அனுமதி பெற்றுள்ளனர். மதரசாவை மீண்டும் திறப்பதில் எந்த அரசியலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலவரம்
ஹிந்து அமைப்பு தலைவர் சிவகுமார் கூறியதாவது:
தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று ஹிந்து அமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மதரசாவோ அல்லது மஜ்ஜித்தோ; மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது. தற்போது இப்பகுதியில் அமைதி நிலவுகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம்.
கடந்த 2016ல் ஹிந்து பிரமுகர் ராஜு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தால் கலவரம் ஏற்பட்டது. எனவே, இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அப்பகுதியினர் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.