பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
ADDED : ஜூலை 13, 2024 05:19 AM

பெங்களூரு : 'பெங்களூரில் சட்டவிரோதமாக பிளக்ஸ் பேனர் தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி, போலீசார் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு தொடரக்கூடாது?' என கேட்டு, கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரில் சட்டவிரோதமாக பிளக்ஸ் பேனர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தும், பல இடங்களில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. 'பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி எச்சரித்தும், எந்த முன்னேற்றமும் இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தததில், முதியவர் ஒருவர் படுகாயமடைந்த, 'கோமா' நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், நேற்று தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
அவ்வப்போது அதிகாரிகள், குறிப்பாக மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளால் பதிவுகள் நிரம்பி உள்ளன. ஆனாலும் நீதிமன்றத்தின் கவனம் ஒரு செய்தியால் ஈர்க்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி, 6.8 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி, மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எனவே, இனி சட்டவிரோதமாக பிளக்ஸ் பேனர்கள் பொருத்தப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதியுங்கள். இதுதொடர்பாக, கர்நாடக அரசு, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர், நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
அத்துடன், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது' என்பதற்கு, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர், நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர், ஜூலை 26ம் தேதி நடக்கும் விசாரணையின்போது பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.