ADDED : ஏப் 23, 2024 06:13 AM

ஷிவமொகா, : ''நாங்கள் என்றும் ஒப்பந்த அரசியல் செய்தது இல்லை,'' என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.
ஷிவமொகாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
தார்வாடில் சுயேச்சையாக போட்டியிட போவதாக கூறிய மடாதிபதி திங்களேஸ்வரா சுவாமி வேட்புமனுவை, வாபஸ் பெற்று உள்ளார். எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்கும்படி, அவருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில், வருமான வரி சோதனை நடக்கிறது. பா.ஜ.,வில் பணக்காரர்கள் இல்லையா.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஊழல் செய்யவில்லையா. மத்திய அமைச்சர் ஷோபா, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோர் வீட்டில், வருமான வரி சோதனை ஏன் நடக்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் வருணா, ஷிகாரிபுராவில் ஒப்பந்த அரசியல் நடந்ததாக, ஈஸ்வரப்பா கூறுகிறார். அவரை பற்றி பேச நான் விரும்பவில்லை. மூளைக்கும், நாக்குக்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுபவர் அவர். நாங்கள் ஒப்பந்த அரசியல் செய்தது இல்லை. எங்களிடம் 134 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, அரசு கஜானா காலியானதாக கூறுகிறார். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. வளர்ச்சி பணிகளுக்காக பட்ஜெட்டில் 1.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளேன். பட்ஜெட் பற்றி குமாரசாமிக்கு ஏதாவது தெரியுமா. பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, பதவியின் மாண்பை மனதில் வைத்து பேச வேண்டும்.
பிரதமர் என்பவர் அனைத்து சமூகத்தினரையும், ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். பதவி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. கர்நாடகாவிற்கு வரி பங்கீட்டில் அநீதி நடக்கிறது. இதுபற்றி கிராம மக்களுக்கு தெரியப்படுத்த, சொம்பு விளம்பரம் செய்தோம்.
அதற்கு பதில் கொடுப்பதற்காக, காங்கிரஸ் ஆபத்து என்று பா.ஜ.,வினர் கூறி உள்ளனர். பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய்; இலவச பஸ் பயணம் கொடுப்பது ஆபத்தா. சமூகத்தை உடைக்கும் பா.ஜ., தான் நாட்டின் ஆபத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
