மம்தா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் திலிப் கோஷ்
மம்தா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் திலிப் கோஷ்
ADDED : மார் 28, 2024 01:29 AM

கோல்கட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக, பா.ஜ., மூத்த தலைவர் திலிப் கோஷ் நேற்று மன்னிப்பு கோரினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1 வரை, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே பலத்த போட்டி நிலவுவதால், இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், மேதினிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், எம்.பி.,யுமான திலிப் கோஷ், இந்த முறை, பர்தமான் துர்காபூர் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், தன் சமூக வலைதள பக்கத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக வீடியோவை, நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார்.
அதில், 'மம்தா கோவாவுக்குச் செல்லும்போது கோவாவின் மகள் என்று கூறுகிறார். திரிபுரா செல்லும் போது திரிபுராவின் மகள் என்று சொல்கிறார். முதலில் அவரின் தந்தை யார் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். எல்லாருக்கும் மகளாக இருப்பது நல்லதில்லை' என கூறியிருந்தார்.
இது மேற்கு வங்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. திலிப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிணமுல் காங்., அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.
தேர்தல் நடத்தை விதிகளை திலிப் மீறியதாக தலைமை தேர்தல் கமிஷனில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தன் பேச்சு குறித்து விளக்கமளிக்க திலிப் கோஷுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், தன் பேச்சுக்கு திலிப் கோஷ் நேற்று மன்னிப்பு கோரினார்.
அவர், ''மேற்கு வங்க மக்கள் மற்றும் பிற மாநில மக்களின் இடஒதுக்கீடு தொடர்பாகவே அவ்வாறு நான் பேசியிருந்தேன். எனக்கும், முதல்வருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை. இருப்பினும், என் பேச்சு திரிணமுல் காங்., கட்சியினரை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்,'' என்றார்.
