குளிர்விக்கும் கோடை மழை; பெங்களூரு மக்கள் உற்சாகம்
குளிர்விக்கும் கோடை மழை; பெங்களூரு மக்கள் உற்சாகம்
ADDED : மே 10, 2024 05:25 AM

பெங்களூரு : பெங்களூரு மக்கள் மனதை குளிர்விக்கும் வகையில், கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
பெங்களூரு ஒரு காலத்தில் 'குளுகுளு' நகரம் என்று, பெயர் எடுத்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அடிக்கும் வெயிலால், அந்த பெயர் அப்படியே தலைகீழாக மாறியது.
பெரும்பாலும் கோடை வெயில், மார்ச் மாத இறுதியில் தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கடும் வெயில் அடித்தது. ஏப்ரல் மாத இறுதியில், வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
இதனால் வெளியே செல்ல முடியாமல், மக்கள் வீடுகளுக்கு முடங்கினர். 'வருண பகவானே... வழி விடப்பா' என்று மழைக்காக கோரிக்கை வைத்தனர்.
கோடை வெயில் அடிக்கும் அக்னி நட்சத்திர கால கட்டத்திலும் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தாலும், மாலையில் மழை பெய்தது.
சிவாஜிநகர், கே.ஜி., சதுக்கம், மெஜஸ்டிக், டானரி சாலை, ஜெயநகர், ஜெ.பி.நகர், ஓசூர் ரோடு, பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர், எலஹங்கா, நாகேனஹள்ளி கேட், சிங்கசந்திரா, ஹெப்பால், பேட்ராயனபுரா.
கொடிகேஹள்ளி, ராஜாஜிநகர், பசவனகுடி, சாம்ராஜ்பேட், டவுன்ஹால், பாகல்குன்டே, பீன்யா, ஹம்பிநகர், நந்தினி லே அவுட், நாகபுரா, கொட்டிகேபாளையா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சாலையில் மழைநீர் தேங்கியது. வாகனங்கள் மெதுவாக சென்றதால், சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவில் வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில், வீட்டிற்கு சென்றவர்கள், மழையில் நனையாமல் இருக்க, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில், ரயில் சுரங்கபாதை அடியில் நின்று கொண்டனர். வழக்கம்போல சிறுவர்கள், மழையில் நனைந்து உற்சாகம் அடைந்தனர்.