மணிப்பூரில் தொடரும் வன்முறை: பதிலடிக்கு தயாராகும் போலீசார்
மணிப்பூரில் தொடரும் வன்முறை: பதிலடிக்கு தயாராகும் போலீசார்
ADDED : செப் 02, 2024 11:40 PM

இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை சமீபகாலமாக தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.
இந்நிலையில், மேற்கு இம்பால் மாவட்டத்தின் கொடூர்ன் கிராமத்தில் பயங்கரவாத கும்பல், ராக்கெட் லாஞ்சர் மற்றும் ட்ரோன் வாயிலாக குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் அங்குள்ள ஐந்து வீடுகளையும் தீக்கிரையாக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினரை பார்த்து, தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடியது. இதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மணிப்பூர் போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேற்கு இம்பால் மாவட்டத்தின் கொடூர்ன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அதிநவீன ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி உள்ளனர்.
போர்க்களங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இத்தகைய கருவிகள் வாயிலாக பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதை மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே கருதுகிறோம்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் நன்கு பயிற்சி பெற்ற நபர்கள் இத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய சூழலை நன்கு கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற தாக்குதல்களுக்கு உரிய பதிலளிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.