கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நிறத்தை இழக்கும் பவளப்பாறைகள்
கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நிறத்தை இழக்கும் பவளப்பாறைகள்
ADDED : மே 07, 2024 12:45 AM

கொச்சி, கடலில் வெப்ப அலை அதிகரித்து வருவதால், பவளப் பாறைகள் நிறத்தை இழந்து வருவதாகவும், இது கடல் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லட்சத்தீவுகள் பகுதிகளில், பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. இவை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்தவை.
ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கடல்சார் உணவுகள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், லட்சத்தீவுகள் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பவளப் பாறைகள் பல வண்ணங்களில் இருக்கும். இதுபோன்ற பவளப் பாறைகள் உருவாவதற்கு பல முக்கிய அம்சங்கள் தேவை. குறிப்பிட்ட அளவிலேயே, கடலின் வெப்பநிலை இருக்க வேண்டும்.
கடல் அலை குறைவாக இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என, பல சூழ்நிலைகளிலேயே, பவளப் பாறைகள் உருவாகின்றன. இந்தப் பவளப் பாறைகள், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளன.
கடந்தாண்டு அக்., முதல், லட்சத்தீவுகள் பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில், கடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதனால், வெளுக்கப்பட்டதுபோல், பவளப் பாறைகள் நிறத்தை இழந்து வருகின்றன.
இது, கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மீன்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை குறைத்து விடும்.
இதன் தொடர் தாக்கமாக, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மீனவர்களுக்கு வருவாய் இழப்பு, உணவு இழப்பு ஏற்படும்.
சுற்றுலாவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவை அனைத்தும் உடனே நடக்காவிட்டாலும், தொடர்ச்சியான பாதிப்பைகளை உருவாக்கிவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.