உங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள்: அமைச்சர்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு
உங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள்: அமைச்சர்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு
ADDED : ஜூலை 18, 2024 11:03 PM

பெங்களூரு: ''சட்டசபைக்கு சரியான நேரத்துக்கு வாருங்கள். உங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள். அனைத்து உறுப்பினர்களும் சரியான நேரத்துக்கு வந்தால், நல்ல முறையில் விஷயங்களை விவாதிக்கலாம். இனியும் இப்படி நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்,'' என சபாநாயகர் காதர் எச்சரிக்கை விடுத்தார்.
கர்நாடகா சட்டசபைக்கு அமைச்சர்கள் வராததை கண்டித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த பின், சட்டசபையில் நடந்த விவாதம்:
சபாநாயகர் காதர்: அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் கூட்டத்தொடரை நடத்த வேண்டும். சபைக்கு வராமல் இருப்பது சரியில்லை.
இதனால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அமைச்சர்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டும்.
சட்டசபை காலை 10:00 மணிக்கு கூடும் என்று நிர்ணயித்திருந்தேன். ஆனாலும், அமைச்சர்கள் வரவில்லை.
தினமும் காலை 9:30 மணிக்கு கூட்டம் துவங்கினால், நிறைய விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம். இப்படி வராமல் இருப்பது சரியில்லை. எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு ஆளுங்கட்சியினரே வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.
எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததும் சரியில்லை. அவர்களும் தவறு செய்கின்றனர். இனியும் இப்படி ஆகாமல் நடந்து கொள்ள வேண்டும்.
காங்., - ராஜு காகே: நீங்கள் சொல்வது சரியாக உள்ளது. சபாநாயகர், காலை 7:30 மணிக்கு சட்டசபையை கூட்டினாலும் நாங்கள் வருகிறோம்.
எங்கள் தொகுதியை சேர்ந்தவர்கள் வருவதால், அவர்களை சந்தித்து விட்டு வருவதற்கு சற்று தாமதமாகிறது.
ஒரு வேளை சந்திக்காமல் வந்தால், பெங்களூரு சென்றும் எம்.எல்.ஏ.,க்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கெட்ட பெயர் வரும். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சபாநாயகர்: நான் 4 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி இருக்கிறேன். என்னை சந்திக்க வருவோரிடம், இப்போது சட்டசபைக்கு செல்ல வேண்டும், மாலையில் சந்திக்கிறேன் என்று சமாதானம் செய்துள்ளேன். அப்படி சொல்லலாமே.
ராஜு காகே: நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், மாலையில் அமைச்சர்கள் கிடைப்பதில்லை. எனவே காலையில் அமைச்சர்களுடன் சந்திக்க வைத்து, அவர்களின் பிரச்னையை தீர்த்து வைக்கிறோம்.
இல்லை என்றால், சட்டசபை முடிந்ததும், தினமும் மாலையில் ஒரு மணி நேரம் ஒதுக்கும்படி, அமைச்சர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
சபாநாயகர்: இந்த விஷயத்தை நீங்களே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் வெளிப்படுத்துங்கள். நான் சொல்ல முடியாது.
காங்., - சரத் பச்சேகவுடா: அரசியல் காரணத்துக்காகவும், ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அமைச்சர் பைரதி சுரேஷ்: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, சட்டசபை 11:00 மணிக்கு ஆரம்பமாகும். அப்போது, பா.ஜ.,வினர் யாரும் வரவில்லை. சில நாட்களில், நண்பகல் 12:00 மணி, 12:30 மணிக்கு துவங்கிய உதாரணமும் உண்டு.
சபாநாயகர்: அந்த விஷயம் எல்லாம் இப்போது வேண்டாம். சட்டசபைக்கு சரியான நேரத்துக்கு வாருங்கள்.
உங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள். அனைத்து உறுப்பினர்களும் சரியான நேரத்துக்கு வந்தால், நல்ல முறையில் விஷயங்களை விவாதிக்கலாம். இனியும் இப்படி நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.