நடைபாதையை யார் ஆக்கிரமித்தாலும் கவுன்சிலர் தான் முதல் அரெஸ்ட்: மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி
நடைபாதையை யார் ஆக்கிரமித்தாலும் கவுன்சிலர் தான் முதல் அரெஸ்ட்: மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி
UPDATED : ஜூன் 28, 2024 02:07 AM
ADDED : ஜூன் 28, 2024 01:53 AM

கோல்கட்டா: “நடைபாதை போன்ற பொது இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்தால், முதலில் அந்த வார்டு கவுன்சிலர் கைது செய்யப்படுவார்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
பொது இடங்களை ஆக்கிரமித்து தொழில் செய்வது, குடியிருப்பது, வாடகைக்கு விற்பது போன்ற குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்துள்ளன.
சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரண மக்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் பலவிதமாக பாதிக்கப்படுகின்றனர். சாலை விபத்துகளுக்கு பிரதான காரணம் நடைபாதை ஆக்கிரமிப்புகளே என ஆய்வுகள் தெரிவிக்கினறன.
தினமும் கட்டிங்
புகார்கள், வழக்குகள் அதிகமானதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு மம்தா உத்தரவிட்டார். இதையடுத்து, மாநிலம் முழுதும் புல்டோசர்களுடன் அதிகாரிகள் களம் இறங்கினர்.
ஏராளமான ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. இரண்டு நாட்களாக நடந்த அதிரடி தொடர்பான ஆய்வு கூட்டத்தை மம்தா நேற்று நடத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மம்தா பேசியதாவது:
பிழைப்புக்காக ஏழைகள் பொது இடத்தில் கடை போட்ட காலம் மாறி, ஆக்கிரமிப்பு இன்று பெரிய அளவில் தொழிலாக வளர்ந்துள்ளது.
செடி வளர்ந்து மரமான பின் வெட்டுவது வீண் வேலை. ஆக்கிரமிப்பை வளர்த்துவிட்டு, புல்டோசர் அனுப்பி தகர்ப்பதும் அப்படிப்பட்ட வீண் வேலை தான்.
உள்ளூர் அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு தெரியாமல் எந்த ஆக்கிரமிப்பும் நடக்க முடியாது. உண்மையில் இவர்கள் தான் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கின்றனர்.
அதில் ஆதாயம் பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் கட்சி பேதம் பார்ப்பது கிடையாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் ஒன்றுதான்.
போகும் இடமெல்லாம் ஆக்கிரமிப்பை பார்க்கிறேன். நடப்பதற்கே இடமில்லை என்றால் பாதசாரிகள் எங்கே போவர்? சாலையில் தான் நடப்பர். அப்படி நடந்தால் வாகனங்கள் எப்படி செல்ல முடியும்?
போக்குவரத்து என்னாவது? ஆக்கிரமிப்பாளர்கள் தினமும் கட்டிங் தருகின்றனர் என்பதற்காக, மொத்த நடைபாதை அல்லது சாலையை அப்படியே அவர்களிடம் ஒப்படைத்து விடுவீர்களா? பேராசை உங்களை அழித்து விடும்.
எல்லா கட்சிகளும் போட்டி போட்டு பொது இடங்களை கபளீகரம் செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ்., கூட இதே வேலையை செய்கிறது. அசன்சாலில் ஒரு குளத்தை மண் போட்டு நிரப்பி, அதில் மூன்று மாடி கட்டடத்தை எழுப்பியுள்ளனர்.
மக்கள் பயன்படுத்தும் குளத்தையே மூடலாமா? பாரதிய ஜனதா கட்சியினர் தான் கோல்கட்டாவில் அதிகமான சட்டவிரோத கார் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கி நிர்வாகம் செய்து சம்பாதிக்கின்றனர்.
போலீஸ் கமிஷனர் அந்த இடங்களை எல்லாம் லிஸ்ட் எடுக்க வேண்டும். அந்த இடங்களை கார் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தினால் யாருக்கும் பாதிப்பு வராது என தெரிந்தால், சட்டபூர்வமாக அதை அங்கீகரித்து, டெண்டர் விடுங்கள். மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கட்டும்.
சமூக விரோத கூட்டணி
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே தவிர, இப்படி கைகோர்த்து கொள்ளை அடிக்க கூடாது. இந்த மோசமான, சமூக விரோத கூட்டணிக்கு முடிவு கட்ட போகிறேன்.
இனிமேல் எங்கே பொது இடம் ஆக்கிரமிக்கப் பட்டாலும், முதலில் அந்த பகுதியின் கவுன்சிலர் அல்லது பொறுப்பான அரசியல் புள்ளி கைது செய்யப்படுவார். அதிகாரிகள், போலீசார் மீதும் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
நடைபாதை வியாபாரம் செய்ய ஒதுக்கப்பட்ட இடங்களில் போலீஸ் தலையிட கூடாது. அந்த வியாபாரிகள் வீடு தொலைவில் இருக்கும். தினமும் சாமான்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று திரும்ப கொண்டுவர முடியாது.
அவற்றை பத்திரமாக வைத்துச் செல்வதற்கு இடம் ஒதுக்கி கொடுங்கள். தேவையானால் கட்டடம் கட்டி பொருட்களை வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.