ADDED : ஜூலை 31, 2024 04:31 AM

விஜயபுரா, : கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில், பரோலில் வந்து தலைமறைவாக இருந்தவர், 21 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயபுரா, காந்திசவுக் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் நாயக், 62. கடந்த 1999ம் ஆண்டு, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பசவராஜ் நாயக்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விஜயபுரா 4வது கூடுதல் நீதிமன்றம் கடந்த 2001 ல் தீர்ப்பு அளித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட பசவராஜ் நாயக், தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், விஜயபுரா நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், கடந்த 2003ல் பசவராஜ் நாயக் பரோலில் வந்தார். பரோல் முடிந்த பின், சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவரை, போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின், அவரை தேடாமல் போலீசார் விட்டுவிட்டனர்.
இந்நிலையில், தார்வாட் கல்கட்டகி ராம்நாளா கிராமத்தில், பசவராஜ் நாயக் வசிப்பது பற்றி, காந்தி சவுக் போலீசாருக்கு, சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் காலை, பசவராஜ் நாயக் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த அவர், 21 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.