ADDED : மே 29, 2024 09:18 PM

பாகல்கோட்: கதவை திறக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜன்னல் வழியாக இளம்பெண் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
விஜயபுராவின் மூரணகேரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 35. இவர் தன் கணவர், 8 வயது மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த மவுனேஷ் பட்டர், 38, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மவுனேஷுக்கும் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். நாளடைவில் லட்சுமிக்கும் மவுனேஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. ஒரு மாதத்திற்கு முன்பு, தன் 8 வயது மகளுடன், வீட்டில் இருந்து லட்சுமி வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார்.
பாகல்கோட் அருகே கடனகேரி கிராமத்திற்கு வந்தனர். தம்பதி என கூறி, வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினர்.
குடும்பம் நடத்தி வந்தனர். சில தினங்களாக, நடத்தையில் சந்தேகப்பட்டு லட்சுமியிடம் மவுனேஷ் தகராறு செய்தார். 27ம் தேதி இரவு, லட்சுமியிடம் கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்து மவுனேஷ் வெளியே சென்றார். மறுநாள் இரவு வீட்டிற்கு வந்தார். நீண்ட நேரமாக கதவை தட்டினார். லட்சுமி திறக்கவில்லை.
ஆத்திரம் அடைந்த மவுனேஷ், ஜன்னல் வழியாக லட்சுமி மீது ஆசிட் வீசினார். இதில் லட்சுமியின் வலது கன்னத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது 8 வயது மகளுக்கும் கை, காலில் காயம் ஏற்பட்டது.
இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மவுனேஷ் கைது செய்யப்பட்டார்.