ADDED : ஆக 16, 2024 06:46 AM
ஹாசன்: கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தில் மூவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஹாசன், சென்னராயபட்டணாவின் ஏரி தெருவில் வசித்தவர் சீனிவாஸ், 43. இவரது மனைவி ஸ்வேதா, 36. இவர்களுக்கு நாகஸ்ரீ, 13, என்ற மகள் உள்ளார். சீனிவாஸ், கார் ஓட்டுனராக பணியாற்றினார்.
அவரது மனைவி ஸ்வேதா, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
இவர்களின் மகள் நாகஸ்ரீ, எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமீப காலமாக குடும்ப தேவைக்கு, சீனிவாஸ் பல இடங்களில் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்.
கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால், குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர். ஆகஸ்ட் 13ல் தம்பதி, தங்கள் மகளுடன் காணாமல் போயினர். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே சென்னராயபட்டணா போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். போலீசாரும் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை, பாகூர் பேரூராட்சியின், மாதாபுரா அருகில் உள்ள கால்வாயில், சீனிவாஸ், ஸ்வேதாவின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தம்பதி, மகளுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தம்பதியின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. சிறுமி நாகஸ்ரீயின் உடலை தேடி வருகின்றனர். எஸ்.பி., முகமது சுஜிதா, சம்பவ இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

