பாதயாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி; பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு
பாதயாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி; பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு
ADDED : ஆக 03, 2024 04:17 AM
பெங்களூரு : 'பா.ஜ., - ம.ஜ.த.,வின் பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். சட்டப்படி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநில காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை கண்டித்து, பெங்களூரில் இருந்து, மைசூருக்கு, பா.ஜ., - ம.ஜ.த., இன்று பாதயாத்திரை துவங்குகிறது.
நகரின் கெங்கேரி கெம்பம்மா கோவிலில் இருந்து பாதயாத்திரையை துவக்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு மாநில பா.ஜ., பொதுச்செயலர் ராஜிவ் அரசிடம், அனுமதி கோரி இருந்தார்.
ஆனால், 'பெங்களூரில் இருந்து பாதயாத்திரையை துவக்குவதற்கு அனுமதி இல்லை' என, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜிவ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதி ஹேமந்த் சந்தன கவுடர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''கெங்கேரி முதல், மைசூரு வரை பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். சட்டப்படி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என, மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.