தர்ஷன் மீதான குற்றப்பத்திரிகை தகவலை வெளியிட ஐகோர்ட் தடை
தர்ஷன் மீதான குற்றப்பத்திரிகை தகவலை வெளியிட ஐகோர்ட் தடை
ADDED : செப் 10, 2024 11:41 PM
பெங்களூரு : ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட குற்றவாளிகள் தொடர்பாக, குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை வெளியிட ஊடகங்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் தர்ஷனின் தோழி பவித்ராவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால், ரேணுகாசாமி, 33, என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அதில் உள்ள தகவல்களை வெளியிட தடை விதிக்கக் கோரி, தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் மனு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் உள்ள தகவலை வெளியிட தடை விதித்து இருந்தது.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், ஒவ்வொரு தகவலாக ஊடகங்களுக்கு கசிந்து வந்தது. இதனால் தர்ஷனின் இமேஜ் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையில் உள்ள தகவலை வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்கக் கோரி, தர்ஷன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஹேமந்த் சந்தன கவுடர் நேற்று விசாரித்து, குற்றப்பத்திரிகை தகவலை வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், பெங்களூரு கமிஷனர் தயானந்தா நேற்று கூறுகையில், ''ரேணுகாசாமி கொலை வழக்கு குறித்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அல்லது விரைவு நீதிமன்றம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைப்போம்,'' என்றார்.