குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் அளித்தது கோர்ட்
குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் அளித்தது கோர்ட்
ADDED : ஜூலை 18, 2024 07:20 PM
புதுடில்லி:குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, தமிழகத்தைச் சேர்ந்த 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறாக பேசியதாக, சென்னை போலீசால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தவிர அவர் மீது, பல அவதுாறு வழக்குகள் உள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த அமர்வு, இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது.
இந்நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவரை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவையும், கமலா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
இது தடுப்பு காவல் சட்டம் தொடர்பானது. இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மேம்போக்காக நடந்துள்ளதாக தெரிகிறது. இது ஒரு தனிமனிதன் சுதந்திரம் தொடர்பானது. அவர் ஏற்கனவே இரண்டு மாதங்களாக தடுப்புக் காவலில் சிறையில் உள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதனால், அதில் நாங்கள் தலையிடவில்லை. அந்த மனு மீது உயர் நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிவு எடுக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
அதுவரை சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறோம். இது, இந்த வழக்கு தொடர்பானது மட்டுமே. மற்ற வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
நீதிமன்றங்கள் குறித்தும் அவர் தவறாக விமர்சித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, இந்த வழக்குக்கு தொடர்பில்லாதது. அதை ஒரு காரணமாக கூறி, அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜாமினில் விடுவிக்கப்பட்டால், எவ்வித ஆதாரமும் இல்லாமல், எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கக் கூடாது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.