ADDED : மே 30, 2024 10:01 PM
பெங்களூரு - கோவிலை இடித்து மசூதி கட்டியதாக, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர்கள் காலத்திய, மூடலதுார் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. விஜயநகர பேரரசர்கள், மைசூருவை ஆண்ட மன்னர்கள், கோவிலுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் திப்பு சுல்தான் ஆட்சியில், கோவிலை இடித்து விட்டு, மசூதி கட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அகழாய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பஜ்ரங் தள் அமைப்பினர் மனு செய்தனர்.
அந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா விசாரித்து வருகிறார். நேற்றும் மனு மீதான விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, கர்நாடக அரசு, இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.வி.அஞ்சாரியா உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.