பரப்பன அக்ரஹாரா சிறையில் கஞ்சா, துப்பாக்கி விசாரணை நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பரப்பன அக்ரஹாரா சிறையில் கஞ்சா, துப்பாக்கி விசாரணை நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 22, 2024 04:03 AM
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு கஞ்சா, துப்பாக்கி, தோட்டாக்கள் சப்ளை செய்யப்படுவதாக வழக்கறிஞர் கூறியதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, மாநில அரசுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சிராஜுதின் அகமது நேற்று வாதிடுகையில், ''என் கட்சிக்காரரின் மருமகன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்க வேண்டும்' என, சிறை கண்காணிப்பாளர் மற்றும் சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்தால், சிறையின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும்' என கூறி, அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
''அதே வேளையில், மாநிலத்தின் பல்லாரி, பெலகாவி, சித்ரதுர்கா சிறையில் உள்ள கைதிகளுக்கு, வீட்டு சாப்பாடு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பெங்களூரு மத்திய சிறையில் வீட்டு சாப்பாடு வழங்க அனுமதியில்லை. மேலும் மாநில சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''தடை செய்யப்பட்ட பொருட்கள் எவை?,'' என்றார்.
அதற்கு வழக்கறிஞர், ''சிறை அதிகாரிகளால் சிறைக்குள் மொபைல் போன்கள், கஞ்சா, துப்பாக்கி, தோட்டாக்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக, சிறையில் இருந்த கைதி ஒருவர், அவரின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவரும் சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு, மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். இதனால் சம்பந்தப்பட்ட கைதி, தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கைதிகளுக்கு வெற்றிலை பாக்கு கூட கொடுக்கப்படுகிறது,'' என்றார்.
''வெற்றிலை, பாக்கா?'' என ஆச்சரியப்பட்ட நீதிபதி, ''அப்படியானால் தடபுடலாக உணவு பரிமாறப்படுகிறதா?'' என, அரசு வழக்கறிஞரை பார்த்து நகைச்சுவையாக கேட்டார்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ''சிறையில் விசாரணை கைதியாக உள்ள உங்கள் கட்சிக்காரருக்கு, என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது?'' என வழக்கறிஞர் சிராஜுதின் அகமதுவிடம் கேட்டார்.
அதற்கு சிராஜுதின் அகமது, இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விபரஙகள் தெரிவிக்க முற்பட்டார்.
அதற்கு நீதிபதி, ''உங்கள் மனு விசாரணைக்கு வரும்போது, வாதிடுங்கள்,'' என கூறி, வழக்கை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின், சிறைக்குள் கஞ்சா, துப்பாக்கி, தோட்டாக்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.