ADDED : செப் 03, 2024 12:33 AM
புதுடில்லி: 'ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது; அதில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
நாடு முழுதும் சமூக, பொருளாதார ரீதியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பிரசாத் நாயுடு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிசங்கர் ஜண்டியலா, வழக்கறிஞர் ஷ்ரவண குமார் கர்ணம் ஆகியோர் வாதிடுகையில், 'கடந்த 1992ல் இந்திரா சஹானி தீர்ப்பில், அவ்வப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
'எனவே, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதற்குரிய தரவுகளை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுவை திரும்ப பெறுங்கள்' எனக்கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.