தேர்தல் பத்திர விற்பனை வழக்கு சிறப்பு விசாரணைக்கு கோர்ட் மறுப்பு
தேர்தல் பத்திர விற்பனை வழக்கு சிறப்பு விசாரணைக்கு கோர்ட் மறுப்பு
ADDED : ஆக 03, 2024 12:50 AM
புதுடில்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அரசியல் கட்சிகள் ரொக்கமாக வசூலித்து வந்த தேர்தல் நிதிக்கு மாற்றாக, தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நடைமுறை 2018ல் அமலுக்கு வந்தது.
இதை எதிர்த்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்து, கடந்த பிப்., 15ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தல் பத்திர விற்பனையில் நடந்த ஊழல் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிடவும், இதன் வாயிலாக பெறப்பட்ட நன்கொடையை திருப்பி அளிக்க உத்தரவிடவும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தங்களால் பலன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக, ஆளுங்கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கப்பட்டது என்ற அனுமானத்தின் அடிப்படையில், விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
சாதாரண குற்றவியல் சட்ட நடைமுறையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அப்படியிருக்கையில், ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தவிடுவது பொருத்தமற்றது. மேலும், அரசியல் கட்சிகள் ஏற்கனவே பெற்ற நன்கொடைகளை திரும்ப வசூலிக்கவும் உத்தரவிட முடியாது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.