மானை கொன்றவர்கள் மீது வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
மானை கொன்றவர்கள் மீது வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : செப் 05, 2024 03:52 AM
பெங்களூரு, : மானை சுட்டு கொன்றவர்கள் மீதான வழக்கை, ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சாம்ராஜ்நகரின் பண்டிப்பூர் வனப்பகுதியில், கடந்த 2008ல் புள்ளி மானை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக, கேரளாவின் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. சுட்டு கொன்ற மானை கேரளாவுக்கு எடுத்து சென்ற போது, அங்குள்ள போலீசாரிடம் சிக்கினர். மான் இறைச்சி, உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவானது.
ஒரே சம்பவத்திற்கு இரண்டு மாநிலங்களில் வழக்கு பதிவானதால், கர்நாடகாவில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் விசாரணைக்கு மனுதாரர்கள் சரியாக ஆஜராகவில்லை.
மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில், ''வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும். 16 ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும், இன்னும் விசாரணை நடக்கிறது. ஏன் இவ்வளவு காலம்.
''குற்றம்சாட்டபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்ப்பதே, விசாரணை தாமதத்திற்கு காரணம். மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்,'' என்றார்.