பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் பிரதமர் மோடி ஆவேசம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் பிரதமர் மோடி ஆவேசம்
ADDED : ஆக 26, 2024 03:13 AM

ஜல்கான்: ''பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம். இதில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதுபோல, இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவுபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கானில், பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டமான, 'லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு' நேற்று நடந்தது. இதில், 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும், 4.3 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 2,500 கோடி ரூபாய் சுழல் நிதியை விடுவித்து, 5,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்களை வழங்கினார்.
படுகொலை
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவின் தானேயின் பத்லாபூரில், இரண்டு சிறுமியர் பள்ளி வளாகத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பெண்களின் பாதுகாப்பே நம் நாட்டின் முன்னுரிமையாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக செங்கோட்டையில் இருந்து பலமுறை பேசியுள்ளேன். நம் சகோதரிகள், பெண்களின் மன வலியை நான் உணர்கிறேன்.
அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்பதை உணர வேண்டும். இதில், குற்றவாளிகளை எந்தவிதத்திலும் தப்பிக்க விடக் கூடாது.
இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமல்ல; நாடு முழுதுக்கும் பொருந்தும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தப்பிக்க விட, காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.
அது பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் என, எந்த அமைப்பாக இருந்தாலும், அலட்சியமாக இருக்கக் கூடாது. அனைவரையும் பொறுப்பாக்க வேண்டும். இந்த தகவல், மேல் மட்டத்தில் இருந்து கீழ் வரை செல்ல வேண்டும்.
ரூ.9 லட்சம் கோடி
இந்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. அரசுகள் வரும், போகும். ஆனால், பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு. அது அரசாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி.
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகள் எடுத்ததைவிட பல மடங்கு அதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
கடந்த 2014 வரை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 25,000 கோடி ரூபாய் மட்டுமே கடனாக வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு களில், 9 லட்சம் கோடி
தொடர்ச்சி 14ம் பக்கம்
ரூபாய் வழங்கப்பட்டது.
லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் என்பது, பெண்களுக்கு வருவாயை மட்டும் தரவில்லை. அது, எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றலை தருகிறது. இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. இதில், பெண்களின் பங்கு மிகப் பெரியது.
ஒவ்வொரு வீடு மற்றும் குடும்பத்தின் வளர்ச்சியை பெண்களே உறுதி செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அது போன்ற உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. பெண்களின் பெயர்களில் வீடு வாங்க முடியாது, அதற்கு வங்கிக் கடன் கிடைக்காத நிலை இருந்தது. சுயதொழில் செய்வதற்கு கடன் வாங்க முடியாத நிலை இருந்தது. அதை மாற்றியுள்ளோம்.
ஒரு சகோதரனாக, மகனாக, உங்களுடைய வாழ்க்கையை மாற்ற நான் உறுதி ஏற்றுள்ளேன். வீடில்லாதோருக்கு மூன்று கோடி வீடுகள் கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த மூன்று கோடி வீடுகளும், பெண்களின் பெயரில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.