பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
விஜயபுராவில் அக்கம்மா தேவி பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை செய்தவர் தொட்டமணி. கடந்த 2015ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கருணை அடிப்படையில் இவரது மனைவி ஸ்ரீசைலாவுக்கு, 42, வேலை கிடைத்தது. இந்நிலையில், ஸ்ரீசைலாவுக்கு பேராசிரியர் ஒருவரும், ஊழியர் சங்க அலுவலக பொறுப்பாளர் சுபாஷும் சேர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கருணை கொலை செய்ய அனுமதி கோரி, விஜயபுரா கலெக்டருக்கு, ஸ்ரீசைலா கடிதம் எழுதி உள்ளார்.
வாலிபரை எரித்து கொன்ற 2 பேர் கைது
ஷிவமொகா ஷிகாரிபுரா டோகர்சே கிராமத்தில் 16ம் தேதி, ஒரு கார் எரிந்த நிலையில் நின்றது. காருக்குள் உடல்கருகி வாலிபர் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் ஷிவமொகா டவுன் காடிகொப்பாவின் வீரேஷ், 26, என்பது தெரிந்தது. கடைசியாக யாரிடம் மொபைல் போனில் பேசினார் என்று, போலீசார் ஆய்வு செய்தனர். ஹாவேரியின் ஹனகல்லில் வசிக்கும் உறவினர் பிரவீனிடம் அவர் பேசியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரிடம் போலீசார் விசாரித்தனர். தனது தங்கையை காதலித்ததால், வீரேஷை கொன்று, காருக்குள் உடலை வைத்து எரித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு உதவிய பிரசாந்த் என்பவரும் கைதானார்.
லஞ்சம் வாங்கிய 'மூடா' கமிஷனர் கைது
மூடா எனும் மங்களூரு நகர்புற வளர்ச்சி ஆணையத்தில், நில உரிமைப் பத்திரத்தில் மாற்றம் செய்ய, ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அந்த பத்திரத்தில் மாற்றம் செய்து கொடுக்க, மூடா கமிஷனர் மன்சூர் அலி, இடைத்தரகர் சலீம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு இருந்தனர். லஞ்சம் தர நிலத்தின் உரிமையாளரும் சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர் மனம் மாறியவர், லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். மங்களூரில் ஒரு ஹோட்டலில் வைத்து, லஞ்ச பணம் நேற்று கைமாறியது. அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், மன்சூர் அலி, சலீம் ஆகியோரை கைது செய்தனர்.
சமூக நலத்துறை விடுதியில் தீ விபத்து
துமகூரு பாவகடா ஒய்.என்.ஹொஸ்கோட் கிராமத்தில், சமூக நலத்துறை விடுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட, மாணவர்கள் தங்கி உள்ளனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வார்டன், மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றினார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் 30 படுக்கைகள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கு காரணம் தெரியவில்லை.
சட்ட கல்லுாரி மாணவி தற்கொலை
துமகூரு குனிகல் கொடிஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சைத்ரா, 20. துமகூரில் உள்ள சட்டக்கல்லுாரியில் படித்தார். சாந்தம்மா என்பவரிடம் சைத்ராவின் தாய் லலிதம்மா வட்டிக்கு 18,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அவரால் வட்டியை சரியாக கட்ட முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் லலிதம்மா வீட்டிற்குச் சென்று சாந்தம்மா தகராறு செய்தார். ஆபாசமாகவும் பேசித் திட்டி உள்ளார். தாயை திட்டியதால் மனம் உடைந்த சைத்ரா, நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

